Monday, January 18, 2010

பறவையின் பார்வையில் உலகம் - சாரு நிவேதிதாவின் "மலாவி என்றொரு தேசம்"


இணையம் மூலமாக மலாவியிலிருந்து வாசகர் ஆனந்த் அண்ணாமலை சாருவிற்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சாருவின் பதில்களின் தொகுப்பே "மலாவி என்றொரு தேசம்"


"நம் கனவிலிருந்து பூமியில் நழுவி விழுந்த ஒரு சொர்க்கம்" என்று மலாவியை பற்றி ஆனந்த் விவரிக்கும் புள்ளியில் ஆரம்பிக்கும் உரையாடல் மலாவியின் நயாசா ஏரி, வறுமை, வாழ்க்கை முறை, சமகால இலக்கியம், மதம், ஆன்மிகம், அங்குவாழும் இந்தியர்களின் உயர் மனோபாவம் என்று பயணித்து யு.ஜி,ஜே.கே,ஓஷோ என சுழன்று மீண்டும் மலாவியின் பாரம்பரிய குலே நடனம், இந்திய கல்வி முறை,செட்டிநாடு உணவு பழக்கம் என்று விரிந்து முடிகிறது.


புத்தக வெளியீடு விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல, சில சமயங்களில் ஆனந்த் மயிலாப்பூரிலும் , சாரு மலாவியிலும் இருப்பது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது. சுயநல வியாபார நிமித்தம் ஆப்ரிக்காவில் நுழைந்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறையை குலைத்த பின், அவர்களை முட்டாள்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கும் காலனிய பார்வையை ஆனந்தும் வைத்திருப்பது சற்று நெருடலான விஷயம். சாரு இன்னும் இது பற்றி விளக்கமாக எழுதி இருக்கலாம்...


சாருவின் வழக்கமான நான்-லீனியர் உரையாடலும், பல்வேறு விஷயங்களை ஆழமாக தொட்டு செல்வதும், ஆனந்த் மலாவியர்களை பற்றியும் குலே நடனத்தையும் சிறுகதை போன்று விவரிப்பதும் இந்த புத்தகத்தின் பலம். குறிப்பாக " இண்டலெக்சுவல் ப்ராஸ்டிட்டியூட்ஸ்" மற்றும் "கழுகின் ரத்தம்" ஆழ்விவாதத்திற்குரிய பகுதிகள்.


புத்தகத்தை இன்னும் கவனமாக எடிட் செய்திருக்கலாம். உதாரணம் ஒரு வாசகரின் தமிழ் எழுத்துரு பற்றிய கேள்வி. (பக்கம் - 86 )



தலைப்பு - மலாவி என்றொரு தேசம்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்.



பின் குறிப்பு: இந்த புத்தகத்தை சாரு சமர்பித்திருக்கும் "வள்ளியூர் ஞான பாஸ்கர்" அடியேன் தான். இந்த கௌரவத்தை வழங்கிய சாருவிற்கு நன்றிகள்.