Monday, February 1, 2010

கரிசல் காடு சொல்லும் கதைகள் - கி. ராஜநாராயணனின் "வேட்டி"


கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா. வின் இந்த தொகுப்பில் வேட்டி , தான் , எங்கும் ஒரு நிறை , கனிவு , வேலை..வேலையே வாழ்க்கை , மகாலட்சுமி , கனா , பூவை , கரிசல்காட்டில் ஒரு சம்சாரி ஆகிய சிறுகதைகளும் எங்கள் ஊர் , நானும் என் எழுத்தும் , கதைக்கு ஒரு கரு , வியத் + நாம் ஆகிய கட்டுரைகளும் சில கடிதங்களும் உள்ளன.

தனது ஒரே வேட்டி கிழிந்து போன நிலையில் தூங்காநாயக்கருக்கு பீறிடும் வேட்டி பற்றிய நினைவுகளே வேட்டி. வகை வகையான வேட்டிகள் மற்றும் துவைக்கும் முறைகள் பற்றிய விவரிப்பு, குறிப்பாக துவை வேட்டி பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனக்கே உரிய நகைச்சுவையுடன் விவரித்திருப்பது அருமை... சுதந்திரம் வாங்கி கால் நூற்றாண்டு ஆனபிறகும் (எழுதிய ஆண்டு - 1972) சாலைகளின் தரம் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்கு விவசாயின் வாழ்க்கை தரம் வளராததன் முரண் பற்றிய அங்கதம் சிறப்பு.
கனிவு - கிராம புதுமண ஜோடியின் காதலையும் ஊடலையும் சொல்லும் ரொமான்ஸ் கதை. தொழுவுக்கு மாடு பிடிப்பது போல் மாலையிட்டு கொண்டையா வீட்டுக்கு வரும் மல்லம்மா... அவர்களுக்குள் நடக்கும் ஈகோ, பாம்பு கடித்தபின் ஊற்றெடுக்கும் காதல், ஆடியில் படும் அவஸ்தை(ஆடி பாதி ஆண்டு பாதி) என தனக்கே உரிய கிளுகிளுப்பான மொழியில் கி.ரா கலக்கியிருப்பார்... இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது.

எருமை மாடு மேய்க்க கொண்டுவரப்படும் சிறுமி பேரக்காள் பூ வாசனையே இன்றி வளர்ந்து திருமண நாளன்று பூ வாசனையால் மயங்கி விழும் நிகழ்வை ஒரே மூச்சில் நெஞ்சில் தைக்கும்படி சொல்லும் கதை பூவை. (கதைகேற்ற அருமையான தலைப்பு)

நாவலாக விரிக்கும் சாத்தியங்களுடைய கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற சிறுகதை ஒரு மனிதரின் முழு வாழ்க்கையையும் கண் முன் காட்டுகிறது.

அறிமுக எழுத்தாளர்களுக்கு உபயோகமான கதைக்கரு பற்றிய ஒரு கட்டுரையும் அருமை.


இந்த புத்தகம் பற்றிய யாழிசையின் அருமையான பதிவு - http://yalisai.blogspot.com/2008/11/blog-post_24.html

4 comments:

லேகா said...

பாஸ்கி,

கரிசல் காட்டு கதைகள் எப்போதும் வாசித்தாலும்,கேட்டாலும் அலுப்பை தராதவை,.அதுவும் கி.ரா வின் மொழியில் சொல்லவே வேணாம்.
கி.ரா வின் எல்லா படைப்புகளும் பாதுகாக்க பட வேண்டியவை.

வேட்டி சிறுகதை தொகுதி எனக்கு மிக பிடித்தமானதொன்று.

பகிர்ந்தமைக்கு நன்றி.

Baski.. said...

பின்னூடத்திற்கு நன்றி லேகா..

Raja M said...

என்றும் இளமையான எழுத்து கி.ரா வின் எழுத்து.

"நாவலாக விரிக்கும் சாத்தியங்களுடைய கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற சிறுகதை ஒரு மனிதரின் முழு வாழ்க்கையையும் கண் முன் காட்டுகிறது."

நிச்சயமான உண்மை. பகிர்தலுக்கு நன்றி!

கரிகாலன்

தவமணி said...

சுருங்கச் சொன்னால் கி.ராவை படிக்கும் போது நம்மையும் கரிசல் மண்ணில் காலாற நடக்க வைக்கிறார்

Post a Comment